சவாலாக மாறியுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்.. கவலையாக உள்ளது.." என்கிறது அரசாங்கம்

 
 
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளது. இது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், தீர்வொன்றை எட்ட முடியாமை கவலையளிக்கிறது. எவ்வாறிருப்பினும் எதிர்வரும் மாதங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்க முடியும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை ஹட்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இதனைத் தெரிவித்த அமைச்சர்  

நாம் ஆட்சியமைத்து 9 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்தக் காலப்பகுதிக்குள் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரித்திருக்கின்றோம். 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளிலும் சம்பளம் அதிகரிக்கப்படும்.
அரச சேவையைப் போன்றே தனியார் துறையிலும் பெருமளவான தொழிலாளர்கள் உள்ளனர். அதிகளவான தொழிலாளர்கள் தனியார் துறை சார்ந்தவர்களாகவே உள்ளனர்.

அவர்களுக்கான ஆகக் குறைந்த சம்பளம் நீண்ட காலமாகவே வரையறுக்கப்பட்ட ஒரு தொகையாகவே காணப்பட்டது.
எனினும் நாம் வரவு – செலவு திட்டத்தின் ஊடாக குறித்த ஆகக் குறைந்த சம்பள அளவை அதிகரித்துக் கொடுத்திருக்கின்றோம்.
அதனை அடுத்த ஆண்டு மேலும் அதிகரிப்போம். ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது இன்னும் எமக்கு சவாலாகவே உள்ளது.

அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மிகக் குறைவாகும். ஆனால் பெருந்தோட்டக் கம்பனிகள் பாரிய இலாபமீட்டுகின்றன. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் நிதி அமைச்சு தொடர்ந்தும் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அவ்வாறிருந்தும் இன்னும் அவர்களுக்கு சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுக்காததை எண்ணி கவலையடைகின்றோம்.

எவ்வாறிருப்பினும் நாம் அதற்கான போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. நாம் வழங்கிய வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். அதேபோன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். எதிர்வரும் சில மாதங்களில் இதனை நிறைவேற்ற முடியும் என்று நம்புகின்றோம் என்றார்.